இசைக்கலை மனிதப் பண்பாட்டை விளக்கும் கருவிகளில் மிகச்சிறந்த ஒன்றாகும். இசைக்கலையில் தமிழர் சிறந்திருந்தமையினால்தான் அதனை மொழி வகைகளில் தனி ஒன்றாக அமைத்து “இசைத்தமிழ்“ என்றனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தமிழிசை பற்றிய ஞானமே இல்லை என்று சொல்லுமளவுக்கு அதன் நிலை தாழ்ந்து இருந்தது. தமிழரின் இசைக்கலையானது பழமைக்கும் புதுமைக்கும் இடையில் ஒரு மாபெரும் மாற்ற நிலையைக் காட்டுவதாக அமைந்திருந்தது. இந்நிலையில் தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர் இசைத்தமிழின் வேர்களைத்தேடிக் கண்டுபிடித்து, “கருணாமிர்த சாகரம்” என்னும் இசைத்தமிழ் ஆய்வு நூலினை 1917-இல் வெளியிட்டார். இவரே இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலக் கட்டத்தில் இசைத்தமிழ் ஆய்வின் வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் அடிகோலியவர். இவர் எழுதிய இசைத்தமிழ் ஆய்வு நூலான கருணாமிர்த சாகரம் உருவாவதற்குச் சிலப்பதிகார மூலமும் அதன் உரைகளான அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும் அடிப்படையாக அமைந்திருந்தன.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் சேர இளவல் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை மகோபாத்திரியாயர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் 1892-இல் “இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்” என்னும் நூலாகப் பதிபித்தார். முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் இசைத்தமிழின் கருவூலமாகும். உ.வே.சாமிநாதையரின் சிலப்பதிகாரப் பதிப்பு வெளிவந்த வெள்ளிவிழா ஆண்டான 1917–இல் தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதரின் நூலான கருணாமிர்த சாகரம் பதிப்பிக்கப்பட்டது. சிலம்பின் இசை நுணுக்கங்களை மேலும் அறிந்திட உதவும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும் சிலப்பதிகார இசைக் குறிப்புகளுக்குத் தக்கச் சான்றுகள் காட்டி விளக்குகின்றன. அங்ஙனம் சிலம்பின் வழிவந்த முதல் இசைத்தமிழ் ஆய்வு நூல் கருணாமிர்த சாகரமாகும்.
“உலகிலுள்ள யாவராலும் மிகச் சிறந்ததென்று கொண்டாடப்படும் தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றிச்சொல்லும் பூர்வ இசைத்தமிழ் நூல்களாகிய அகத்தியம், பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைமரபு, இசைநுணுக்கம், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள், சங்கீதத்திற்கு முக்கிய ஆதாரமாகிய சுரங்களையும், சுருதிகளையும், நுட்பச் சுருதிகளையும், இராகமுண்டாக்கும் முறையையும், எவரும் இன்னும் அறிந்துகொள்ளக்கூடாத அவ்வளவு அளவு நுட்பமாகச் சொல்லுகின்றனவென்று நான் சொல்லவந்ததைப் பெரியோர்கள் அங்கீகரிக்கும்படி மிகவும் வணக்கமாய்ப் பிரார்த்திக்கிறேன்.” என்று கருணாமிர்த சாகரத்தின் முதல் புத்தகத்தின் முகவுரையில் ஆபிரகாம் பண்டிதர் சிலப்பதிகாரத்தை குறிப்பிட்டு உரைத்துள்ளார்.
இசையின் அமைதிகளான கோவை அமைதிகள், பண் அமைதிகள், தாள அமைதிகள், ஆடலாசான் அமைதிகள், இசைக் கருவிகளின் அமைதிகள் முதலியவைகளில் ஏற்பட்டுள்ள சிலம்பின் தாக்கம் கருணாமிர்த சாகரத்தில் சிறந்த சில எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளன. “அமைதிகள்” என்பது “இலக்கணம்” எனப் பொருள்படும். குறிப்பாக கருணாமிர்த சாகரத்தின் காணலாகும் பண் அமைதிகளில் சிலம்பு செலுத்தும் தாக்கத்தை தெளிவிக்கும் வண்ணம் இங்கு காண்போம்.
ஏழு சுவரங்கள்
சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்ட ஆய்ச்சியர் குரவையில் இசையின் ஏழு சுவரங்களின் தமிழ் பெயர்கள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பவைகள் காணலாகின்றன. அவ்வரிகள்,
“குடமுதல் இடமுறையா குரல் துத்தம்
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே” - சிலப். ஆய்ச். 8-10
மண்டிலம்
மண்டிலம் என்பது ஏழு சுவரங்கள் நிற்கும் இடத்தை (அல்லது நிலையை)க் குறிக்கும். குரல்(ச) முதல் தாரம்(நி) வரையிலுள்ள எல்லையை மண்டிலம், இயக்கு அல்லது ஒரு ஸ்தாயி என்கிறோம். அவை,
“வலிவு மெலிவுஞ் சமனு மெல்லாம்
பொலிக் கோர்த்த புலமை யோனுடன்” - சிலப். அரங்.93
என அரங்கேற்றுக் காதையில் யாழாசிரியன் அமைதி கூறுமிடத்தும்,
“மூவகை யியக்கமு முறையுளிக் கழிப்பி” - சிலப். வேனிற்.42
என வேனிற்காதையில் கூறுமிடத்தும் மூவகை மண்டில வகைகளை (மெலிவு, சமம், வலிவு) என இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளதனை கருணாமிர்த சாகரத்தில் காணலாம்.
கோவை
சுவரம் என்பதற்குத் தமிழில் கோவை, நரம்பு, தந்தி, தந்திரி, கோல், கேள்வி எனப் பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இதனைத் தொல்காப்பியர், சிலப்பதிகாரம், பிங்கல நிகண்டு வழிநின்று காணுமிடத்து,
“பிழையா மரபின் ஈரேழ் கோவை”- சிலப். வேனிற்.31
“இசையொடு சிவணிய நரம்பின் மறைய”- தொல்.நூன்மரபு.நூ.33
“கோலே தந்திரி குரலிவை நரம்பே” – பிங்கலம்.1415
எனக் குறிப்பிட்டுள்ளன. குரல்(ச) ஒலியை அடிப்படையாகக்கொண்டு பிற இசை நரம்பொலிகள் ஒரு கோவையில் கோர்க்கப்படுகின்றது. சிலம்பின் தாக்கத்தால் ஏழ் கோவை, பன்னிரு கோவைகள், ஈரேழ் கோவை, கோவை அலகு முதலியவைகள் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தில் காணலாகின்றன. சுருதிகள் (அ) அலகு
அலகு என்பது இசை நரம்போசையின் நுண்ணிய பகுப்பாகும். பன்னிரு அரைச் சுரங்களுக்குரிய அலகின் பகுப்புத் தொகை இருபத்திரண்டு என்பதே இன்றும் நிலைவி வருகின்றது. இவை ஒருவாறு கால்சுரங்களாகும். பண்டிதர் தம் நூல் கருணாமிர்த சாகரத்தில் நுண் அலகுத்தொகை இருபத்தி நான்கு என்கிறார். பண்டிதரின் இசைக் கோட்பாடு என்பது இருபத்தி நான்கு அலகுகள் என்பதாகக் கூறி வரும் வழக்காறு இன்றும் உள்ளது. இவருடைய இருபத்தி நான்கு அலகு முறையை தேவநேய பாவணர், முத்தையா பாகவதர், மன்னார்குடி யாழ்ப்புலவர் ராஜகோபால ஐயர் என்பர்கள் ஏற்புடையக் கூற்றாக உடன்படுகிறார்கள்.
பண் அமைதிகள்
இசையானது பல்வேறு பண்களின் அடிப்படையில் அமைகின்றது. ‘இராகம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் ‘பண்’ ஆகும்.
தமிழர் இசை
தமிழர் இசை என்பது நாற்பெரும் பண்களையும், அவற்றினின்று பெயர்த்துக் கொள்ளப்பெற்ற ஏழ்பெரும் பாலைகளையும், கிளைப் பண்களையும், சாதிப் பண்களையும், நூற்று மூன்று பண்களையும், நரம்புகளின் அடைவில் உரைக்கப் பெற்ற பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்றாகிய (11,991) ஆதி இசைகளையும் கொண்டது.
நாற்பெரும் பண்கள்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நானிலப் பகுப்பே தமிழக இயற்கையாதலின் நான்கு நிலத்திற்கும் நான்கு பண்கள் எனத் தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்கிறார். இந்நான்கு நிலத்திற்கும் உரிய பண்கள் முறையே செம்பாலை, படுமலைப்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை என்பன. இளங்கோவடிகளார் இது குறித்து,
"நாற்பெரும் பண்ணும்.....பண்ணெனப் படுமே"-சிலப்.வேனிற்.202. எனக் குறிப்பிடுகின்றார்.
“தாரத்து உழைதோன்றப் பாலையாழ் தண்குரல்
ஓரும் உழைத் தோன்றக் குறிஞ்சியாழ் நேரே
இளி குரலில் தோன்ற மருதயாழ் துத்தம்
இளியிற் பிறக்க நெய்தலி யாழ்”-சிலப். ஆய்சி. அடியார்க்.உரை.13
என்றுரைப்பார் அடியார்க்கு நல்லார். தாரத்து (நி) உழை (ம) தோன்றுமாயின் பாலையாழும், குரல் (ச) உழையில் (ம) தோன்றுமாயின் குறிஞ்சியாழும். இளி (ப) குரலில் (ச) தோன்றுமாயின் மருதயாழும். துத்தம் (ரி) இளியில் (ப) தோன்றுமாயின் நெய்தல் யாழும் பிறக்கும் என்பதை நாம் உணரவியலும்.
“தாரம் குரலான பாலை யாழும்
குரல் இளியான மருத யாழும்
உழை குரலான குறிஞ்சி யாழும்
துத்தமான நெய்தல் யாழும்” - க.சா.முதற் புத்.மூன்றாம் பா.ப.46.
என ஆகப் பெரும் பண்கள் நாலாகும்.
ஏழ்பெரும் பாலைகள்
நான்கு நிலத்திற்கும் உரிய பண்களாகிய செம்பாலை, படுமலைப்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை என்பனவற்றோடு செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை ஆகிய மூன்றும் சேர்ந்து ஏழ்பெரும் பாலைகள் என்னும் ஏழு பண்கள் அக்காலத்தில் இருந்தன என்பதைச் சிலப்பதிகாரக் காப்பியத்தின் வழி அறியலாம். செம்பாலை எனும் முல்லைப்பண் தமிழர்களின் அடிப்படைப் பண்ணாக (இராகம்) அமைந்து, வட்டப்பாலை முறையில் ஏழு பண்களைப் பிறப்பிக்கிறது. ஒரு பண்ணுக்குரிய சுரவீடுகளை (நரப்படைவு) மாற்றியமைப்பதால் வேறொரு பண் கிடைக்கிறது. இவ்வாறு ஒவ்வொன்றிலிருந்து ஒன்றாக வட்டப்பாலையில் பண்ணுப் பெயர்த்து ஏழு பாலைகள் உண்டாயின.
வட்டப்பாலை
தமிழிசையின் அடிப்படையான பாலை(அலகு)ப் பகுப்புகளுள் ஒன்று வட்டப்பாலை முறையாகும். வட்டப்பாலை முறையை ஆராய்ந்தவர்களுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர் அபிரகாம் பண்டிதர். 'கருணாமிர்த சாகரம்' நூலில் இதற்கான விரிவான ஆய்வுகளை சிலப்பதிகாரத்தின் வழி பண்டிதர் விளக்கியுள்ளார்.
பண்ணுப் பெயர்த்தல்
பண்ணுப் பெயர்த்தல் என்பது ஒரு பண்ணில் ஏனைய சுரங்களைக் கொண்டு புதிய பண் உருவாக்குதலாகும். இதில் பன்னிரண்டு சுரதானங்களை நிரலே நிறுத்திக்கொண்டு அடிப்படைப் பாலைக்குரிய சுரதானங்களை முதன்மைப்படுத்த வேண்டும். பண்டிதர் குறிப்பிட்டுள்ள வலமுறைத் திரிபில் வட்டப்பாலை முறையில் கிடைக்கப்பெறும் ஏழ்பெரும் பாலைகளின் பட்டியலாவன:
எண் |
பாலை |
பண் |
இக்கால இராகம் |
நரம்படைவு |
1. |
செம்பாலை |
முல்லைப்பண் |
சங்கராபரணம் |
சரி2 க2 ம1பத2நி2 |
2. |
படுமலைப் பாலை |
குறிஞ்சிப்பண் |
கரகரப்பிரியா |
ச ரி2 க1 ம1பத2நி1 |
3. |
செவ்வழிப்பாலை |
நெய்தல்பண் |
தோடி |
சரி1க1ம1 பத1நி1 |
4. |
அரும் பாலை |
சுடுநிலப்பாலைபண் |
கல்யாணி |
ச ரி2 க2 ம2பத2நி2 |
5. |
கோடிப் பாலை |
மருதப்பண் |
அரிகாம்போதி |
ச ரி2க2ம1ப த1நி1 |
6. |
விளரிப்பாலை |
நெய்தல்பண் |
நடபைரவி |
ச ரி2க1ம1பத1நி2 |
7. |
மேற்செம்பாலை |
மருதப்பண் |
இருமத்திமத்தோடி |
சரி1க1ம1ம2த2நி1 |
கிளைப்பண்
ஆய்ச்சியர் குரவை மூலம் முல்லைப் பண்ணின் தோற்றத்தையும் கிளைப்பண்களின் தொன்மையையும் அறியலாம்.
முல்லைத் தீம்பாணி
முல்லைத் தீம்பாணி என்பது ஐந்து சுரமுடைய கிளைப்பண்ணாகும். முல்லைத் தீம்பாணியின் இலக்கணமும் கூறும் ஆய்ச்சியர் குரவை பாடல் வரிகள்,
முல்லைத் தீம் பாணி’ என்றாள்
குரன்மந்த மாக இளிசம னாக
வரன்முறையே துத்தம் வலியா – உரனிலா
மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின்
பின்றையைப் பாட்டெடுப் பாள்” - சிலப். ஆய்ச்.18
‘குரன் மந்தமாக’ என்னும் வெண்பாவில் கு. து2 கை2 இ வி2 (ச ரி2 க2 ப.த2) என்னும் ஐந்து நரம்புகள் குரல் முதல் இணை தொடுக்கப் பிறக்கின்றன. இவையே முல்லைத் தீம்பாணியின் ஏறு இறங்கு நிரல் வரிசையாகும். ஆய்ச்சியர்கள் குரவை ஆடும் முல்லைத் தீம்பாணியின் சுரங்களின் நிரல்படி நின்று ஆடினர் என்பதை தெளிவுப்படுத்தும் வரிகளாவன,
“மாயவன் என்றாள், குரலை; விறல் வெள்ளை-
ஆயவன் என்றாள், இளி-தன்னை; ஆய் மகள்
பின்னை ஆம் என்றாள், ஓர் துத்தத்தை; மற்றையார்
முன்னை ஆம் என்றாள் முறை.
மாயவன் சீர் உளார், பிஞ்ஞையும் தாரமும்;
வால் வெள்ளை சீரார், உழையும் விளரியும்;
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்; வலத்து உளாள்,
முத்தைக்கு நல் விளரி-தான் - சிலப். ஆய்ச்.14
இங்கே மாயவன் என்றாள் குரலை; இளி நரம்பை வெள்ளை ஆயவன் (பலராமன்) என்றாள்; துத்தத்தை ஆய்மகள் பின்னை என்றாள்; மற்றையப் பெண்களைக் கைக்கிளை உழை விளரி தாரமென்றாள். மாயவன் என்ற குரல் நரம்பைப் பின்னையான துத்தமும், தாரமும் சேர்ந்து நின்றன; பலராமன் ஆகிய இளி நரம்பை உழையும் விளரியும் சேர்ந்து நின்றன; கைக்கிளை என்கின்ற நரம்பு பின்னைக்கு இடப்பக்கமே நின்றது; முத்தை ஆகிய தாரத்துக்கு வலப்பக்கம் விளரி நின்றாள்.
மேலும் சிலம்பில் கொன்றை அம் தீம் குழல், ஆம்பல் அம் தீம் குழல், முல்லை அம் தீம் குழல் ஆகிய மூன்று ஐந்து நரம்புப் பண்கள் கூறப்பட்டுள்ளன.
முல்லைப் பண்ணும் கிளைப்பண்களும் சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகின்றன என்பதைப் பண்டிதர் ஆய்ந்தறிந்து முதன் முதலாகப் பண்ணாய்வுக்கு அடிகோலியவராவார். பின்னாளில் இவ்வாய்வின் வளர்ச்சியாக முனைவர். எஸ்.இராமநாதன் அவர்கள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடும் முல்லைத் தீம்பாணி என்பது ஐந்து சுரமுடைய கிளைப்பண் “மோகன இராகம்” என்பதையும் நிருபணம் செய்துள்ளார்.
சாதிப்பண்கள்
சாதிப்பண்கள் என்பவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நான்கு வகையாம்.
பெருகியல் என்பதைப் பண்டிதர்: மேல் அகநிலை எனக் குறிப்பிட்டுள்ளார். “அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற நாலு விதமான ஜாதிகளில் அகநிலை, புறநிலை, அருகியல், மேல் அகநிலை என்பவற்றை பேஸ் (bass) டென்னர் (tenor), ஆல்டோ (alto), டிரபில் (treble) என்னும் நாலு பகுப்பாக (parts) மேற்றிசையார் வழங்கி வருகிறார்கள்.” எனப் பண்டிதர் ஒப்பிட்டு காட்டுவது அவரது பரந்துபட்ட இசைப்புலமையை வெளிப்படுத்துகிறது எனலாம்.
"உழைமுத லாகவு முழையீ றாகவுங்
குரன்முத லாகவுங் குரலீ றாகவு
மகநிலை மருதமும் புறநிலை மருதமு
மருகியன் மருதமும் பெருகியன் மருதமு
நால்வகைச் சாதியு நலம்பெற நோக்கி" - சிலப்.வேனிற். 203.
என வரும் சிலப்பதிகார பாடலடிகள் மருதத்தின் சாதிப்பண்களை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறாகப் பிற பண்களுக்கும் சாதிப்பண்கள் அமைவதும் குறிப்பிடத்தக்கது.
அகநிலை என்றால் ஒவ்வொரு யாழின் ஆரம்ப சுரத்தில் வரும் இராகமாகும். புறநிலை என்றால் நால்வகை யாழ்களின் ஆரம்ப சுரத்திற்கு நாலாவதான நட்பு நரம்பில் தொடங்கும் இராகமாகும் (ச-க வைப்போல்). அருகியல் என்றால் நால்வகை யாழின் ஆரம்ப சுரத்திற்கு ச-பவைப்போல் இணையாக வரும் சுரத்தில் ஆரம்பிக்கும் இராகங்களாகும் (இது ச-ப முறையாகும்). பெருகியல் என்றால் நால்வகை யாழ்களில் ஆரம்பிக்கும் சுரத்திற்குமுடிந்த சுரமாக வரும் சுரத்தில் துவங்கும் இராகங்களாகும் (ப-நி யைப்போல்) என சாதிப்பண்களின் விளக்கம் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நுண் அலகுப்பாலைகள்
பாலை என்பது பகுப்பு அல்லது வகை எனப் பொருள்படும். அவை ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என நான்கு வகைப்படும். இந்நான்கு பாலை வகைகளும் ஏழிசை முறையையே பன்னிரண்டு, இருபத்தி நான்கு, நாற்பத்தி எட்டு, தொண்ணூற்று ஆறு அலகுகளாகப் பகுத்து நுண் அலகுப்பாலைகளைப் பெறுவதாகும். இதனை,
“ஆயஞ் சதுரந் திரிகோணம் வட்டமெனப்
பாய நான்கும் பாலையாகும்”-சிலப். ஆய்ச். அடியார்க்.உரை.13.
என அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் குறிப்பிட்டுள்ளதற்கு பண்டிதர் கருணாமிர்த சாகரத்தில் விளக்கமளித்துள்ளார்.
நூற்று மூன்று பண்கள்
நூற்று மூன்று பண்களைப் பற்றிச் சிலப்பதிகாரத்தின் ஈருரையாசிரியர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். சிலப்பதிகாரத்தில் குழலோன் அமைதி கூறுமிடத்து,
“வர்த்தனை நான்கு மயலறப் பெய்தாங்கு” - சிலப்.அரங்.58
என்பதற்கு அடியார்க்கு நல்லார்: குழலின் ஏறுநிரலில் துளைகளை விடுத்து ஊதுவதாலும் இரு நிரலிலும் துளைகளை விடுத்து ஊதுவதாலும் பல்வேறு கிளைப்பண்கள் உண்டாகலாம் என்கிறார். இவ்வாறாகக் குழலோன் மாதவியின் நடனத்திற்கு நூற்று மூன்று பண்ணீர்மைகளையும் நிரம்பக்காட்ட வல்லோனாக இருந்துள்ளான் என ஈருரையாசிரியர்களும் கூறியுள்ளனர்.
சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையில் ஏழ் பெரும் பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்கள் பிறக்கும் என்பதாக அடியார்க்கு நல்லார் உரையில் கூறியுள்ளார். இந்நூற்று மூன்று பண்களின் பெயர்களும் கருணாமிர்த சாகரத்தில் இடம் பெறுகின்றன.
ஆதியிசைகள்
பண்டைய தமிழகத்தில் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொரு இசைகளிருந்ததாக (பண்) சிலப்பதிகாரம் கூறுகிறது. “இசையென்பது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகள்” என்று அடியார்க்கு நல்லார் அரங்கேற்றுகாதையில் குறிப்பிட்டுள்ளார்.
"உயிருயிர் மெய்யள வுரைத்தவைம் பாலினு
முடறமி ழியலிசை யேழுடன் பகுத்து
மூவேழ் பெய்தந் .... .... ....
தொண்டு மீண்ட பன்னீ ராயிரங்
கொண்டன ரியற்றல் கொளைவல்லோர் கடனே”
என்னும் மேற்கண்ட வரிகளைக் கவனிக்கையில் தமிழரின் ஆதியிசையென்பது நரம்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகும் (11,991) என்பதனைச் சிலப்பதிகார உரை வழி பண்டிதர் விளக்கியுள்ளார்.
தமிழிசை என்பது எண்ணுமுறையாலும், சுருதி கணக்கு முறையாலும் அமைவன. எனவே தமிழிசைக் கலை என்பது ஒரு மாபெரும் விஞ்ஞானமாகும்.
இவ்வாறாக சிலப்பதிகாரத்தின் மூலம் மற்றும் அரும்பதவுரை அடியார்க்கு நல்லார் உரைகள் வழி நின்று, தொன்றுதொட்டு நிலவிவரும் தமிழிசையின் தொன்மையை முதன்முதலாக உலகிற்கு பறைசாற்றினவர் என்ற பெருமை தஞ்சை ஆபிரகாம் பண்டிதரையே சாரும்.
முனைவர்.ஆ.ஷைலா ஹெலின்
இசைத்தமிழ் ஆய்வாளர்
கேரளப் பல்கலைக்கழகம்
திருவனந்தபுரம்