உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய
'தமிழ் இசை' ஆய்வுகள்
(கட்டுரையாளர் முனைவர்செ.அ.வீரபாண்டியன் (டாக்டர். வீ))
நியூட்டனைத் தாண்டிய ஆராய்ச்சிகளுக்கு இடமில்லை என்றிருந்தால்,அவரின் பல முடிவுகளைத் தவறுகள் என்று ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தி,புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல் வளர்ந்திருக்காது. ஆபிரகாம் பண்டிதர்,விபுலானந்த அடிகளைத் தாண்டிய ஆராய்ச்சிகளுக்கு இடமில்லையென்றால்,தமிழிசை வளர வாய்ப்பிருக்கிறதா?
1996இல்'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music)பல்துறை (interdisciplinary)முனைவர் பட்டம் பெற்றதும்,எனது ஆய்வுமுடிவுகள்'அதிர்ச்சி அலைகளை'ஏற்படுத்தி ஒரு பெரிய விவாதத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் என எதிர்பார்த்தேன். அதற்கான காரணங்கள் வருமாறு:
வெளிப்பட்ட எனது ஆய்வு முடிவுகள் தமிழிசை ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும்,கர்நாடக இசை ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் ஒரு விவாதப் புயலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கடந்த20வருடங்களாக அப்படிப்பட்ட விவாதமின்றி'அமைதியாகத்’தான் தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது.‘பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song)வைரமுத்துக்குத் தெரியாதா?என்று நான் வெளிப்படுத்திய ஆய்வுகருத்தும்,அறிவுபூர்வ விவாதமின்றி'இருட்டில்'இருப்பதால்,திரை இசைப் பாடல்களில்,இசை அமைப்பாளருக்கும்,கவிஞருக்கும் இடையே'வைரமுத்து பாணி'மோதல் தவிர்க்கப்படும் வாய்ப்பை,தமிழ்நாடு இழந்துள்ளதா?என்பதும் ஆய்விற்குரியதாகும்.
ஆனால் எனக்கு முன்பின் தெரியாத,அன்றைய சென்னைப் பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவர் பேரா. என்.ராமநாதன் எனது ஆய்வைப் பற்றி கேள்விப்பட்டு,எனது முனைவர் பட்ட ஆய்வேடு நகலைக் கேட்டு வாங்கிப் படித்தார்.
அதன்பின் சென்னைப் பல்கலைக் கழக இசைப் பாடத்திட்டக்குழு (Board of Studies)உறுப்பினராக என்னை நியமித்து ஒரு பதிவுத் தபால் வந்தது,எனக்கே வியப்பாக அமைந்தது. அதிலிருந்து அவர் விருப்ப ஓய்வில் (voluntary Retirement)வெளியேறும் வரை,எனது ஆய்வுகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஒரு புதிய ஆய்வு முடிவை நான் கண்டுபிடித்து அவருக்கு தொலைபேசியில் சொல்வேன். உடனே மறு வாரமே,அவரது இசைத்துறையில் ஆய்வு மாணவர்கள்,பேராசிரியர்கள் முன்னிலையில் அந்த ஆய்வு முடிவை நான் விளக்கி,விவாதித்து அவர்களின் கருத்துக்களைப் பெற ஏற்பாடு செய்திடுவார். எனது ஆய்வுகள் ஆய்வு இதழ்களில் வெளிவர அரிய ஆலோசனைகள் வழங்கி துணை நின்றார்.
இன்று வரை தமிழிசை தொடர்பான எனது ஆய்வுகளைப் பாராட்டி,ஊக்குவித்து,எதிர்பாராத உதவிகள் புரிந்து வருபவர்கள்,சாதி,மத பேதமின்றி,புலமையாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் பண்புள்ள பிராமணர்கள்,கர்நாடகம்,ஆந்திரம்,வட மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களும்,வெளிநாட்டு அறிஞர்களுமே ஆவர். தமிழ்நாட்டில் தமிழிசை தொடர்பாக புத்தகங்கள் எழுதுபவர்கள் கூட,எனது முக்கியமான தமிழிசைக்கு பெருமை சேர்க்கும் ஆய்வு முடிவுகளைப் புறக்கணித்து எழுதி வருவதைஅடுத்து கீழே பார்ப்போம்.. அறிவுபூர்வ சிக்னலைத் தவிர்த்து உணர்வுபூர்வ இரைச்சலில் பயணிக்கும் தமிழிசை ஆர்வத்தின் குறைபாடுகள் பற்றிய கட்டுரை6வருடங்களுக்கு முன்பேவெளிவந்த பின்னும் அதே இரைச்சல் பயணம் தொடர்வது சரியா?
அத்தகைய'புறக்கணிப்பு'நோய் இலங்கையைச் சார்ந்த பேரா.சிவத்தம்பி போன்றவர்களிடமும் வெளிப்பட்டது நான் எதிர்பாராத ஒன்றாகும். அது தொடர்பான சிறு விளக்கத்தை அடுத்து பார்ப்போம்.
பல வருடங்களுக்கு முன்,என் மனைவி " பேரா.சிவத்தம்பி என்பவர் போனில் பேசினார். தான் வயதானவர் என்றும்,சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள என்னை அய்யா சந்திக்க விரும்புகிறேன் என்றுசொன்னதாகவும்”என்னிடம் சொன்னார். மறுநாள் காலை அவரைச் சந்தித்தேன். ஐரோப்பாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குழந்தைகள் இசை பயில்வதற்கான பாடத்திட்டத்தை சுவிட்சர்லந்தில் அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் உருவாக்கி எடுத்து வந்திருப்பதாகவும்,சென்னைப் பல்கலைக்கழக இசைத் துறையில் என்னைப் பற்றி கேள்விப்பட்டு,என்னைப் பார்க்க விரும்பியதாகவும்,எனது ஆலோசனை வேண்டும் என்றும் சொன்னார். அப்பாடத்திட்டத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் தமிழிசையியல் இன்றி,தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக இசைப் பாடத்திட்ட அடிப்படையில் உருவாக்கி இருந்தார்கள். அதைச் சுட்டிக் காட்டிய போது,அதை அவர் விரும்பாமல்,நியாயப்படுத்தும் வகையில் பேசினார். பின் விபுலானந்த அடிகள்'யாழ் நூல்'சுருதிக் கணக்கீடுகளில் இருந்த குறைபாடுகள் பற்றி,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு இதழில் வெளிவந்திருந்த எனது கட்டுரையின் நகலை அவரிடம் கொடுத்தேன். அதன்பின் அந்த பாடத்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களுக்கு என்னை அவர் அழைக்கவும் இல்லை.
இசை அறிஞர் வீ.பா.கா.சுந்தரம் எழுதி,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட'தமிழிசைக் கலைக் களஞ்சியம் (4தொகுதிகள்) முதல்,நா.மம்மது அண்மையில் வெளியிட்ட'தமிழிசைப் பேரகராதி'வரை, 'சுரம்'என்ற சொல்லைத் தவிர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.தமிழில் இசை தொடர்பாகப் பயன்படுத்தப்படும்'சுரம்'என்ற சொல்லானது,சமஸ்கிருதத்தில் உள்ள'ஸ்வரம்'என்ற சொல்லின் திரிபே என்று வீ.பா.கா.சுந்தரம் உள்ளிட்ட தமிழ் இசை ஆய்வாளர்கள் அனைவரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.சங்க இலக்கியங்களில் வரும்'சுரம்'என்ற சொல்'பாலை நிலம்,வழி,காடு'என்று இசை தொடர்பற்ற பல பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்கருதிக் கொண்டிருக்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் இசை தொடர்பான வரிகளுக்கு உரையாசிரியர்கள் சரியாக விளக்கம் தரவில்லை என்பதை உரிய சான்றுகளுடன் விளக்கி, 1996-இல் முனைவர் பட்டம் பெற்றது முதல்,கடந்த20வருடங்களாக,பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன்.
ஆய்வு இதழ்கள் மட்டுமின்றி, 'கணையாழி'போன்ற இலக்கிய இதழ்களிலும் அவை வெளிவந்துள்ளன. ('தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' (2009)சேகர் பதிப்பகம்,சென்னை)இசையில்'சுருதி'என்ற பொருளில் சங்க இலக்கியங்களில்'அத்தம்'என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், 'இசை வழி'என்ற இசை இயற்பியல் பொருளில்,'சுரம்'என்ற சொல் இசை தொடர்பான வரிகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும்,உரிய சான்றுகளுடன் விளக்கியுள்ளேன். அதை மறுக்காமல்,புறக்கணித்து, 'சுரம்'என்ற சொல் சமஸ்கிருதம் என்று இன்று வரை கருதி,தமிழிசை தொடர்பாக புத்தகங்களில்,அது தமிழ்ச் சொல் அல்ல என்று தவிர்த்து,எழுதி வருவது சரியா?ஏற்கனவே தாம் எடுத்துள்ள நிலைப்பாடுகளில் உணர்ச்சிபூர்வமாக- இரைச்சலுடன் (Noise) -இருப்பதால்,அறிவுபூர்வமான விளக்கங்கள் - சிக்னல்கள் (Signal)-காணாமல் போகிறதா,தமிழிசையிலும்.
மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் உலகப்புகழ் பெற்ற அறிஞர்கள் எனது ஆய்வுகளைப் பாராட்டி ஊக்குவித்து எழுதியுள்ள மடல்களில் சிலவற்றை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
ஆனால் தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் உள்ள பேராசிரியர்களுக்கு மின்மடல் அனுப்பினாலும்,கொரியர் மூலம் அனுப்பினாலும் கிடைத்தது என்று கூட தெரிவிப்பதில்லை. ஒரு பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் மட்டும்தனக்கு இசை தெரியாது என்று ஆய்வுக் கட்டுரையைத் திருப்பி அனுப்பினார். அந்த கட்டுரையில் யாப்பிலக்கணத்தின் இசைப் பரிமாணம் பற்றிய தகவல்கள் இருந்தன. தற்போது கற்பிக்கப்படும் யாப்பிலக்கணத்தில்,தொல்காப்பியத்தில் வரும்‘இசை’என்ற சொல்லை'ஒலி'எனத் தவறாகப் புரிந்து கற்பிக்கப்படுவது தொடர வேண்டும் என்பது தமிழின்,தமிழ்நாட்டின் விதி என்பது எப்போது முடிவுக்கு வரும்?
‘tholkAppiam & Computational Musical Linguistics’தலைப்பில்,ஒரு மத்திய அரசின் பல்கலைக்கழக கணினிப் பேராசிரியருடன் நான் இணைந்து எழுதி வரும் புத்தகம் வெளிவந்து,பொறியியல் மாணவர்கள் அதன்மூலம் ஆய்வுத் திட்டங்கள் மேற்கொண்டு,தொல்காப்பியம் அடிப்படையில் சந்தைப்படுத்தும் கணினி இசை மொழியியல் பயன்பாட்டு மென்பொருட்கள் (Computational Musical Linguistics Application Software)வெளிவந்து,பயன்படத் தொடங்கிய பின்,அது முடிவுக்கு வரலாம்.
உணர்ச்சிபூர்வமான இரைச்சலைத் தவிர்த்து,எந்த தொந்திரவுமில்லாமல் பொறியியல் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், 'தமிழன்'என்ற உணர்வுக்கும் நான் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க விரும்பி,அதற்கும் நேரம் ஒதுக்கி,இது போன்ற பதிவுகள் மேற்கொள்கிறேன். ஏற்கனவே பதிவிட்ட'தமிழின் மரணப் பயணம் தொடங்கி விட்டதா?'என்ற தொடர்,அது உண்மையாகிவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில்,அதைத் தடுக்க நம்மாலான முயற்சிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கில் முயன்றதன் விளைவாகும்.
ஆணிவேரை வெட்டியபின்,ஒரு தாவரத்தை எவ்வளவு நன்றாக பராமரித்தாலும்,அது சூம்பி,பட்டுப்போவதைத் தவிர்க்க முடியாது. தாய்மொழி,பாரம்பரியம்,பண்பாடு போன்ற ஆணி வேர்களைத் தமிழர்க்குக் கேடாக கருதி,வெறுத்து ஒதுக்கியது தான்,தமிழும்,தமிழர்களும்,தமிழ்நாடும் அறிவுபூர்வமான சிக்னலை ஒதுக்கி,உணர்ச்சிபூர்வ இரைச்சலில் பயணிப்பதற்குக் காரணமா?என்ற ஆய்வை இனியும் தாமதப்படுத்துவது பெரும் ஆபத்தாகும்.