மனித நாகரிகத்தின் சிறப்புக்கு அளவுகோலாக விளங்குபவை மக்களிடையே எழுந்துள்ள மொழிவளமும், அதன்வழி தோன்றிய நுண்கலைகளும் ஆகும். அவ்வாறு தோன்றிய நுண்கலைகளைச் சீர்படுத்தி வகுக்கப்பட்ட "ஆயகலைகள் அறுபத்துநான்கு" என்பதில் , உலக உயிர்கட்கெல்லாம் பொதுவானதாகவும், பொதுப் பண்புகளைக் கொண்டதாகவும் மிளிர்வது இசைக்கலையே. அதிலும் தொன்தமிழர் வகைப் படுத்தியமையென "இயற்றமி ழிசைத்தமிழ் நாடகத் தமிழென வகைப்படச் சாற்றினர் மதியுணர்ந்தோரே" என்னும் பிங்கல நிகண்டு கூற்றுக்கிணங்க, இயல்,இசை,நாடகம் (கூத்து) எனும் முத்தமிழையும் ஒருசேர வளர்த்துவந்த பண்பாட்டில், "இசைத்தமிழ்" என்னும் தொன் தமிழிசை ஒரு புனிதக் கலையாகவே போற்றப்பட்டு வந்துள்ளது.
உலகச் செம்மொழிகளிலே மிகவும் மூத்த மொழியான தமிழ்மொழியில்,
பலவாறாகவும் விரவிக்கிடக்கும் தமிழிசையின் சிறப்பு, பண்டைக்
காலம்தொட்டே பேணப்பட்டு வந்திருக்கின்றது. அதிலும் ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஒலிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட கூறுகளே இசை என்றும், ஒலி அளவு, இசைக் கருவிகளின் ஒலிப்பினம், அதிர்வுகள் போன்றவையே இசையை மென்மையாக்கும் காரணிகள் என்றும் வகைப்படுத்தப்பட்ட தமிழிசை, தொன்தமிழர்களின் பண்பாட்டுடன் ஒன்றியமைந்ததாகும். தமிழ்மொழியும் அதன் இனமும் உயிரும் உடலும் போன்றவை. அத்தகு மொழியின் சிறப்பைப் பறைசாற்றுதலில் பெரும் பங்கு வகிப்பது அதன் தொன்மைச் சிறப்புமிகு நூல்வளம். செம்மொழியாம் தமிழ்மொழியின் நூல்வளத்திற்குக் கட்டியம் கூறிய தமிழிசையின் தொன்மைபற்றி ஒரு தொகுப்புக்குள் அடக்க இயலா.
ஒரு மிக நீண்ட வரலாற்றைப் பெற்றிருக்கும் தொன்தமிழிசையின் கூறுகள், தொன்தமிழ் மக்கள் வாழ்க்கையினின்றும் தாமாகவே முகிழ்த்து எழுந்தவை. அதில், தமிழர்களின் கலை, நாகரிகம், பண்பாடு, மொழி போன்றவை உயர்ந்
தோங்கி நிற்கின்றன. இயற்கையோடு இயைந்துவாழ்ந்த தொன்தமிழர்கள் யாவரும் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள், மற்றும் இன்னபிற உயிர்கள் போன்றவற்றின் அசைவினாலும், அவை எழுப்பிய அதிர்வினாலும் ஏற்பட்ட பல்வேறுவகை ஒலிகளைச் செவிவழி கேட்டு, இசை என்ற ஒன்றை உய்த்துணர்ந்து, அதனை என்றும் எக்காலத்தும் கேட்கும் முகமாக, நரம்புகளினாலும், அஃறிணைகளின் தோல்களினாலும் பலவிதமான இசைக்கருவிகளை உருவாக்கி இசைத்து மகிழ்ந்ததன் விழுமியங்களை சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களின் வாயிலாகவும் அறியலாம். அவற்றில் பல அழிந்துவிட்ட போதிலும் எஞ்சிநின்ற சில அரிய இசையிலக்கண நூல்களிலிருந்து தொன்தமிழிசையின் நுணுக்கங்கள் யாவும் நம்மால் அறிய முடிகின்றன.
இதுபற்றிச் சங்க இலக்கியமான அகநானூறு ,
"ஆடமைக் குயின்ற அவிர் துளை
மருங்கின் கோடை அவ்வளி குழலிசை ஆக" எனும் பாடலின்கண்,
கோடைக் காற்றுக்கு அசையும் மூங்கிலில் வண்டுகள் துளையிட, மேலைக்காற்று அதில் நுழைந்து குழலின் இனிமையான இசையைத் தந்தது, நீரருவி கொட்டிய ஓசை முழவு இசையாக முழங்கிற்று, கலைமான் எழுப்பிய குரல் கொம்பு ஊதும் இசையாகக் கேட்டது, மலையின் பூஞ்சாரலில் வண்டுகள் பாடும் இசை யாழிசையாகக் கேட்டது" என்று இசை உருவான வரலாற்றினை ஒரு உருவக அழகியலாக எடுத்தியம்புகிறது.
தொன்தமிழ் இலக்கணநூலான தொல்காப்பியம்,
"அசையும் சீரும் இசையொடு சேர்த்து வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே" என்றும், (தொல். - செய்.10).
"இசைப்பே இசையாகும்" என்றும் மொழிகிறது.
“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்” என இசைத்தமிழ் நூலின் இருப்பு உரைக்கிறது. (தொல்.எழுத்து.நூன்மரபு.33).
மேலும்
“தெய்வம் உணாவே மாமரம் புள்பறைசெய்தி யாழின் பகுதியோடு தொகைஇஅவ்வகை பிறவும் கருவென மொழிப’’
என்ற தொல்காப்பியக் கருப்பொருள் நூற்பாவின் வைப்பு முறையில் "பறை" வைக்கப்பட்டுள்ள பான்மை தோற்கருவிகளின் தொன்மைச் சிறப்பினை அறிய உதவுகின்றது.(தொல்.பொரு.அகத்.18).
பின்னும்,
"துறையமை நல்யாழ் துணைமையோர் இயல்பே” (தொல். பொரு - களவு.1).
"பாணன் பாடினி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்"
தொல். பொரு - கற்பு.52).
"பாட்டின் இயல் பண்ணத்தி யியல்பே"
(தொல். பொரு - செய்.173).
என்று, தொன்தமிழ் ஆதிநூல்களில் கூறப்பட்டவையைச் சிறப்புற எடுத்தியம்புகிறது.மேலும்
“ஆசிரியம், வஞ்சி, வெண்பா,கலி என நால் இயற்று என்ப பாவகை விரியே.”
(தொல்கா. செய்யு. 104)
எனும் நூற்பா முறையே ஆசிரியப்பா,வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியன இயற்பாக்களின் வகைகள் எனக்கூறுமிடத்து தொல்காப்பிய காலத்திற்கும் முன்பே தமிழிசை இருந்ததற்கான சான்றினையும், அதன்வழி அதன் தொன்மையையும் அறியலாம். பின்னும்,தொன்தமிழகத்தில் தமிழிசைக்கு, குழலும், யாழும் சிறந்த கருவிகளாக வழங்கி வந்தமை, பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஐயன் திருவள்ளுவர் இயற்றிய
"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர்" எனும் குறட்பாவால் நன்கு விளங்குகிறது.
வழக்கொழிந்த தொன்தமிழ் இசை நூல்கள்:
தமிழிசையின் இலக்கணங்களையும், அதன் சிறப்புகளையும் கூறும் தொன்தமிழ் இசைநூல்கள் பலவும் இயற்கைச் சீற்றத்தினாலும், இன்னபிற இடர்களினாலும் அழிந்து வழக்கொழிந்து விட்டன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை:
இசைத்தமிழ் செய்யுட்டுறைக் கோவை:
தமிழிசை பற்றிய இந்நூல் இருந்ததற்கான சான்று,
அமிர்தசாகரரின் "யாப்பருங்கலக்காரிகை" க்கு
கி.பி.11 ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கல விருத்தியுரை எழுதியவர். அவர் இன்னாரெனத் தெரியாததால் பெயர் குறிப்பிட இயலவில்லை.
மேலும், அழிந்துபோன இசைநாடக நூல்களான, முத்தமிழ் நூலான அகத்தியம், தலைச்சங்க இலக்கியமான பரிபாடல், தாளசமுத்திரம், தாளவகையோத்து, வரி,சச்சபுட வெண்பா போன்ற நூல்களும், முறுவல், குணநூல், சயந்தம், செயிற்றியம், கூத்தநூல், மதிவாணனார் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து எனும் இலக்கியம், சுத்தானந்தப் பிரகாசம், பரதம், பரத சேனாபதியம் முதலியவையும் மீட்பற இறந்தொழிந்தன.
சங்க இலக்கியங்கள்:
தென்னகத்தில் தமிழிசைக்குச் சிறப்புச் சேர்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் இசைப் பாணர்களும், விறலியர்களும் எனலாம். இத்தகைய இசை வல்லுநர்கள் தவிர்த்து, புலவர்கள், பேரரசர்கள், மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், அவர்களுக்குப் பின் வந்த வடநாட்டு வேந்தர்கள், அயல்நாட்டினர், பாமரமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இசைத்தமிழை உணர்வுப் பூர்வமாகவும்,உணர்ச்சிப் பூர்வமாகவும் போற்றிவந்துள்ளதில் அதன்தொன்மை விளங்குகிறது.
உலகிலேயே முதன்முதலாக இசை நூல்களை ஓலைச்சுவடிகள் மூலமாக எழுதி வெளியிட்டவர்கள் நம் பழந்தமிழர்கள். அவ்வாறு இசைச்செறிவுடன் முச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட அரும்பெரு நூல்களான சங்க இலக்கியங்கள் அனைத்தும் அகம், புறம் எனும் இரு பிரிவுகளுக்குள் அடங்கும். அவற்றில், மனிதவாழ்வின் உயிர்நாடியான காதலும், வீரமும் பலவாறாகவும் இசைநயத்தோடு சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைச்சங்க காலத்து நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றில் தமிழிசை பற்றிய விளக்கங்கள் பலவாறாகவும் காணக் கிடைக்கின்றன.
இவை எழுதப்பட்ட காலம் வேறாகவும், தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3ஆம், 4ஆம் நூற்றாண்டாகவும் இருக்கின்றன.கடந்த 20ஆம் நூற்றாண்டில், 1921இல் மேற்கொள்ளப்பட்ட சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த யாழ், குழல், முழவு, போன்ற தொன்தமிழ் இசைக்கருவிகள் அனைத்தும் மேற்கண்டவாறு தொல்காப்பியம் கூறும் தமிழிசையின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன
பின்னும், ச,ரி,க,ம,ப,த,நி என்னும் ஏழு ஓசைக் கருவியாக இசைத்தமிழானது, ஏழ்பெரும்பாலைகளை வகுத்து
அவற்றை நிலைக்களமாகக் கொண்டு நூற்றுமூன்று பண்களாகப் பிறப்பித்து, அவை தமது விரிவாகப் பல்லாயிரக்கணக்கிலான தொகையினவாகிய ஆதியிசைகளைத் தன்னுள்ளே கொண்டதாகும்.
அதற்குச் சான்றாக ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றானதும், இளங்கோவடிகளால் இயற்றப்பட்டதுமான சிலப்பதிகாரம், பலவகை இசைக்கு முக்கிய ஆதாரமான சுரங்களையும், நுட்ப சுருதிகளையும், இராகம் உண்டாக்கும் விதிகளைக்கொண்டு பாடிவந்த 11,991 ஆதி இசைகளையும், அதன் வழியே உதித்த கிளை இராகங்களையும் கொண்டிருக்கின்றது.
மேலும், பரிபாடல், திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி, சூளாமணி, கல்லாடம், போன்றவை இசை நுணுக்கங்களோடு, பண்களின் பாங்கையும் எடுத்தியம்புகின்றன.
தேவாரம், திருவாசகம் போன்ற திருமுறைகள், திவ்யப்பிரபந்தம்,
திருப்புகழ் போன்ற துதிப்பாடல்கள், அறம் உரைக்கும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பற்பல புலவர்களால் இயற்றப்பட்ட தனிப்பாடல்கள், முத்துத் தாண்டவர், வேதநாயகம்பிள்ளை கீர்த்தனைகள், வரிப்பாடல், குரவைப்பாடல், சீர்காழி அருணாசலக்கவிராயர் இராம நாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, காவடிச்சிந்து, வழிநடைப் பதங்கள்,நொண்டிச் சிந்துகள்,தில்லானா,தென்பாங்கு, இடைக்காலக் காவியங்கள், பிற்காலக் காவியங்கள், நாட்டுப் பாடல்கள் என அனைத்திலும் தமிழிசையின் தொன்மை மேலோங்கி இருக்கின்றன.
பிங்கல நிகண்டு:
இசை நுணுக்கங்களை ஆய்ந்தறிந்து,அவற்றை ஏழாகப் பகுத்ததோடன்றி, அவற்றிற்குக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் பதங்களாகப் பெயரிட்டு வகைப்படுத்தியமை
"குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்றிவை
ஏழும் யாழிசைக்கு எழும் நரம்பே"எனும் பிங்கல நிகண்டு நூற்பா மூலம் அறியவருகிறது.
மேலும் , பொதுவான திணை இரண்டாயினும் அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என ஏழாக வகுத்து, அவற்றில் கைக்கிளை,பெருந்திணை எனும் இரண்டையும் தவிர்த்து, ஏனைய ஐந்திணை மக்களிடத்தே, பண்ணும், யாழும், பறையுமே இசைகொண்ட வாழ்வின் உயிர் நாடியாக வழக்கில்இருந்தன என்பதை அனைத்து இலக்கியங்களும் செப்புகின்றன.
தொன்தமிழிசை பற்றியும், அதன் சிறப்புப் பற்றியும் வெளிவந்த நூல்கள்:
இத்தகு சிறப்புமிகு தொன் தமிழிசை வரலாறுபற்றி, தஞ்சாவூர் ஆபிரஹாம் பண்டிதர், யாழ்ப்பாணம் விபுலானந்த அடிகளார், சாம்பமூர்த்தி, கோதண்டபாணிப் பிள்ளை, டாக்டர்.வி.பா.கா.சுந்தரம், அ.இராகவன், பேராசிரியர். இராமநாதன் போன்றோரும் பல அரிய தகவல்களை எழுதியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, தஞ்சாவூர் ஆபிரஹாம் பண்டிதர் அவர்கள் , 1917 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட "கருணாமிர்த சாகரம்" எனும் நூலில், பழந்தமிழிசை இலக்கணம் பற்றியும், அனைத்து இசைகளும் ஆதித் தமிழிசை வழி வந்தவையே என்றும் தக்க சான்றுகளுடன் எடுத்துரைத்துள்ளார்.
அதில் தொன்தமிழிசையியல் குறித்த பல செய்திகள் காணக் கிடைக்கின்றன. பெரும் பண்கள், திறப்பண்கள், பண்ணுப் பெயர்த்தல், ஆலாபனை, முற்காலப் பிற்கால நூற்களில் கூறியுள்ள இராகங்களின் தொகை, இணை, கிளை, பகை, நட்பு என்னும் பொருந்திசைச் சுரங்களைக் கண்டு கொள்ளும் முறைகள் ஆகியன பற்றி சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் வழி நின்று விளக்கப்படுகின்றது.
மேலும், இளங்கோவடிகள் குறிப்பிட்ட வட்டப்பாலை, ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை, குறித்தும், மாந்தன் உடலுக்கும் யாழ்வடிவுக்கும் ஓப்பீடு, யாழ் வகைகள் குறித்தும் விளக்குகின்றது. பல அரிய தகவல்களைக் கொண்டுள்ள அந்நூல் ஒரு மாபெரும் கடல் போன்றது .
அதனைத்தொடர்ந்து,1930இல் மதுரை பொன்னுசாமிப் பிள்ளை என்பவர் எழுதிய ‘பூர்வீக சங்கீத உண்மை’ என்னும் நூலில், பெரும்பண்கள், கிளைப்பண்கள், சுர அமைப்புகள், இசை நுணுக்கங்கள், ஆகியன குறித்து மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. இந்நூல், தமிழிசை இலக்கண மரபு வழி நின்று, கர்நாடக இசையில் வழங்கிவரும் மேளகர்த்தா இராகங்களைத் தர்க்கரீதியாக நிராகரித்து, அவற்றுள் சில மேளகர்த்தாக்கள் மட்டுமே பெரும் பண்கள் என நிறுவ முனைந்ததானது தமிழிசை வரலாற்றில் மிகப்பெரிய சிந்தனைப் புரட்சியையும்,தமிழிசையின் தொன்மையையும் தோற்றுவித்தது.
அடுத்து, பல்லாண்டு கால ஆராய்ச்சியின் பயனாக சுவாமி விபுலானந்தர் இயற்றிய "யாழ் நூல் என்னும் இசைத்தமிழ் நூல்" எனும் நூல், யாழ் பற்றி மட்டுமின்றி இசைத்தமிழின் பல்வேறு கூறுகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கிறது. பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் என்னும் ஏழு இயல்களையும் பல அரிய தகவல்களை உள்ளடக்கிய ‘சேர்க்கை’ என்னும் பகுதியையும் உடைய "யாழ் நூல்" , இசைத்தமிழின் அனைத்துக் கூறுகளையும் விளக்குகின்றது.
இது தொன்தமிழ் நூல்களை மட்டுமே சான்றாதாரங்களாகக் கொள்ளாமல், பழங் கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்கள் எனப் பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிறப்பினையுடையது.
தொடர்ந்து, 1950ஆம் ஆண்டு ஆபிரகாம் பண்டிதரின் புதல்வர் வரகுண பாண்டியன் என்பவர் , "பாணர் கைவழி என்னும் யாழ் நூல்" என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் யாழ் பற்றிய பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியதுடன் பழந்தமிழரது யாழே பிற்காலத்திய வீணை என்று பல சான்றுகளையும் தந்து விளக்கியுள்ளமை தமிழிசையின் தொன்மைக்குக் கட்டியம் கூறுகின்றது.
மேலும் 1956இல் வெளிவந்த பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனாரின் "ஐந்திசைப் பண்கள்" மிக முக்கியமான தமிழிசைப் பதிப்புக்குரிய ஆவணமாகும்.
சிறந்த இசைக் கலைஞரான முனைவர் எஸ். இராமநாதன் எழுதிய "சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்" என்னும் நூல் சிலப்பதிகாரத்தில் உள்ள பல அரிய இசையியல் செய்திகளைப் பெரிதும் முயன்று ஆழமாக வெளிப்படுத்தி இருக்கிறது. இவரின் மற்றொரு நூலான "சிலப்பதிகாரத்து இசைத்தமிழ்" எனும் நூலும் பழந்தமிழ் இலக்கியங்களை வாசிப்பதற்கான ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கியிருக்கிறது. இதில் தொன்தமிழ்ப் பண்களான, செம்பாலை, முல்லைப்பண், சாதாரி, இந்தளம் ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.
மேலும் ,1959இல் எழுதப்பட்ட, கு. கோதண்டபாணி பிள்ளையின் "பழந்தமிழ் இசை" எனும் நூலும், 1971 இல் வெளிவந்த அவரது "இசையும் யாழும்" எனும் நூலும் தொன் தமிழிசையின் பல அரிய செய்திகளை உள்ளடக்கி, தமிழிசையின் தொன் வரலாற்றையும் சிறப்புகளையும் எடுத்துக்கூறுகிறது.
அவரன்றி, விபுலானந்தரின் மாணவரான க.வெள்ளைவாரணன் என்பவர் 1979இல் எழுதிவெளியிட்ட "இசைத்தமிழ்" எனும் நூலும், 1981இல் தாளக்கருவிகளைப் பற்றி ஆர். ஆளவந்தார் எழுதிய "தமிழர் தோற்கருவிகள்" என்னும் நூலும் தமிழிசையின் தொன்மைச் சிறப்புக்குச் சான்றாகின்றன.
1984ஆம் ஆண்டு,சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டதும்,பேராசிரியர் ஏ.என்.பெருமாள் எழுதியதுமான "தமிழர் இசை" எனும்நூல் தொல் பழங்காலத் தமிழிசை தொடங்கி , தற்போதைய இசைப் பரிமாணங்கள்வரை பல்வேறு கூறுகளையும் ஆய்ந்தறிந்து, தமிழிசையின் சிறப்புகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
இவ்வாறான நூல்கள்வழி , தமிழிசை பழமையான பண்ணமைப்பிலும், தாள அமைப்பிலும்,கொட்டுமுழக்குக் கணக்கிலும் ஈடுஇணையற்றுச் சிறந்து விளங்குவதோடன்றி, கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் ஒரு அரிய கருவி என்பதை உணரலாம். இத்தகு செம்மொழித் தமிழின் இசையியலின் பெருமைகள் தரணி முழுதும் எஞ்ஞான்றும் புகழ்பரப்பும். ஆக, நம் தமிழ்மொழியின்கண் காணப்படும் தொன்மையான தமிழிசை வரலாறு எக்காலத்திற்கும் அழிக்க இயலாப் புகழ் உடையதென்பதும், நம் தொன்தமிழர்களால் உலகுக்கு அளிக்கப்பட்ட ஒரு ஒப்பற்ற கலையே நம் தொன்தமிழிசைதான் என்பதும் திண்ணம்.
கட்டுரையாளர் திருமிகு வழக்குரைஞர்இரா.சுகுணாதேவி,எம்.ஏ., பி.எல்திருப்பூர்