சிலப்பதிகாரத்தில் ஒரு வளப்பமான முழுமையான இசையிலக்கணம் அடங்கியுள்ளது, அதன் கதைப்பகுதிகளுடன் இசையிலக்கணம் பின்னிப் பிணைந்து இயற்றப்பட்டுள்ளதுபோல் உலகில் வேறோர் காப்பியத்தில் காணமுடியாது, தமிழிசையிலக்கணம் என்னும் பெருங்கடலில், சிலப்பதிகாரம் ஓர் ஓங்கியுயர்ந்த கலங்கரை விளக்கம், இது நல்கும் ஒளி உதவியால், இதற்குக் காலத்தால் முந்திய தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை ஆகிய சீரிய நூல்களில் தமிழ்ப் பேரறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ள ஏராளமான இசைக்குறிப்புக்களை விளங்கிக் கொள்ளலாம்.
தென்னிந்தியாவில் ஆதியில் முதன்முதல் தோன்றிய பெரும் பண் “முல்லையாழ்' எனப்பட்டது. இது பின்னர்ச் செம்பாலை எனப் பெயரி பெற்றது. இது இன்றைய அரிகாம்போதி என்று சிலப்பதிகாரத்தின் பதிகவுரையின் மூலமாகவும், ஆய்ச்சியர் குரவைக்குள்ள உரைகளின் மூலமாகவும் மிகத் தெளிவாய்த் திட்டமாய்ச் சிறிதும் ஐய்யின்றி அறிந்து கொள்கிறோம். முல்லை நிலத்து ஆயநங்கையர் தமக்கு நேரிட இருக்கும் பேரிடரை நீக்குதற்காக முல்லை நிலத்துக் கடவுளாகிய திருமாலை வேண்டி, முல்லை நிலத்துக் கூத்தாகிய ஆய்ச்சியர் குரவையை ஆடி, முல்லை நிலத்துப் பெரும் பண்ணாகிய முல்லையாழையும், (அரிகாம்போதி ச ரி2 க2 ம ப த2 நி1ச்) முல்லை யாழின் பகுதியாகிய முல்லைத் தீம்பாணியையும் (மோகனம் = சரி2 க2 பத2 ச்) பாடி வழிபடு கிறார்கள்.
முல்லையாழ் முதலிய நானிலப் பெரும்பண்களாகிய யாழ்களும், அவற்றின் சிறு பண்களும், அவற்றைப் பாடுதற்குரிய பெரும் பொழுதுகளும் சிறு பொழுதுகளும், பாடும் மாந்தரும். அவை பயன்படும் வகைகளும், அவற்றைப் பாடுநர்களின் இயல்புகளும் பாடும் பண்ணின் சுவைகள் முதலியனவும் தொல்காப்பியர் கூறும் கருப்பொருள்களின் பாற்படுகின்றன. இவற்றைச் சங்க இலக்கியச் செய்யுட் பரப்பிலே காணப்படும் பலப்பல எடுத்துக் காட்டுக்களால் தெளிந்து கொள்ளலாம்.
தொல்காப்பிய இயற்றமிழ் இலக்கணத்துள் இழையோடிக் கிடக்கின்றது, இசைத்தமிழ் இலக்கணம். இவ்விரண்டையும் எவரும் முற்றிலும் வேறு வேறாகப் பிரித்து அகற்றி அமைத்துவிடமுடியாது. தொல்காப்பியர் செய்யுட்குக் கூறும் 20 வண்ணங் களையும் முழுக்க முழுக்கத் தேவாரம், திருப்புகழ், கீர்த்தனைகள், சிந்து, கண்ணிகள் முதலிய பாடல்களில் காணலாம். மோனை, எதுகை முதலிய யாப்பு நெறிகள் இன்றிக் கீர்த்தனை இயங்குமா? மோனை எதுகை முதலிய தொடைகளைப் பற்றித் தொல் காப்பியம் கூறியுள்ளது, எனவே கீர்த்தனைகட்குரிய யாப்பு இலக்கணம் தொல்காப்பியத்தில் காணக் கிடக்கின்றது.
தமிழிசை இலக்கணம் சிலப்பதிகாரம் தொட்டு இன்றுவரை சங்கிலித் தொடர்போலத் தொடர்ந்து வருகிறது என்று டாக்டர் எஸ் ராமநாதன் கூறியுள்ளார்.
இந்நூலை எழுதும்போது என் கருத்துக்களைத் தொகுத்து அமைத்துத் தந்தவர் சென்னைக் கிருத்தவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் நிர்மல் செல்வமணியவர்கள். இவர் தொல்காப்பியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்; இவர் உதவி பெரியது; என் நன்றிக்குரியது.
- வீ.ப.கா.சுந்தரம்